Thursday, 27 April 2017

திண்டாடும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை.

திண்டாடும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை.

தற்பொழுது இலங்கை முழுவதிலும் அதிகமாகப் பரவி வரும் டெங்கு இ இன்புளுவென்சா மற்றும் ஏனைய வைரஸ் காய்ச்சல்களினால் யாழ் போதனா வைத்தியசாலையைப் போன்று மாவட்டத்தின் இரண்டாவது பெரிய வைத்தியசாலையான தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையும் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்கின்றது.


நாளாந்த விடுதி அனுமதிகள் இருநூறைத் தொட்டுள்ளதுடன் வெளிநோயாளர் பகுதியும் எந்நேரமும் நோயாளர்களால் நிரம்பி வழிகின்றது.

ஏற்கனவே மிகக் கடுமையான ஆளணி மற்றும் பௌதீக வளப் பற்றாக்குறைகளால் திணறி வந்த வைத்தியசாலைக்கு இது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ மற்றும் குழந்தைகள் விடுதிகள் எந்நேரமும் 30 முதல் 50 வரையான நோயாளர்களைக் கொண்டுள்ளன.விடுதிகளின் பருமன் மற்றும் கட்டில் வசதிகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருப்பதனால் அரைவாசி நோயாளர்கள் பலத்த சிரமத்தின் மத்தியில் பாய்களில் படுத்துத் தங்குவதைக் காணக் கூடியதாக உள்ளது.

வைத்தியசாலைக்குத் தேவையான போதுமான ஆளணியோ மிகவும் ஆபத்தான நோயாளர்களைக் கண்காணிப்பதற்குத் தேவையான மருத்துவ உபகரணங்களோ மற்றும் அத்தியாவசிய ஆய்வுகூட வசதிகளோ மிகக் குறைந்தளவிலேயே வழங்கப்பட்டுள்ள போதும் வைத்தியசாலை தனக்கேயுரித்தான பாணியில் மிகச் சிறப்பான சேவையை வழங்கி வருகின்றது.
வைத்திய நிபுணர்கள் இ வைத்தியர்கள் இ தாதியர்கள் இ நிறைவு காண் மருத்துவ உதவியாளர்கள் மற்றும் சிற்றூழியர்கள் இரவு பகல் பாராது கடுமையான உழைப்பை ஓய்வின்றி வழங்கி வருகின்றார்கள்.

வெறும் இரண்ட ஆய்வு கூட உதவியாளர்கள் மட்டுமே உள்ள போதிலும் அவர்களின் சேவை மகத்தானதாக உள்ளது. தொடர்ச்சியான வேலை காரணமாகப் பெரும்பாலான தாதிய உத்தியோகத்தர்கள் நோயுற்ற போதிலும் தன்னலங் கருதாத அவர்களின் உழைப்பு அனைவரினதும் பாராட்டைப் பெற்றுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலையின் சுமையைப் படிப்படியாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையும் தாங்கி வருகின்ற போதிலும் அதற்குத் தேவையான ஆளணி மற்றும் பௌதீக வளப் பங்கீடுகள்; குறைந்தளவேனும் ஏற்படுத்தப்படாமை தொடர்பில் நோயாளர்கள் கடுமையான விசனத்தை வெளிப்படுத்தி வருகின்றார்கள்.


அத்தோடு அவர்கள் அது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தோடும் வைத்தியசாலை ஊழியர்களுடனும் முரண்படுவது சாதாரண நிகழ்வாயுள்ளது.இது நெருக்கடிகளின் மத்தியிலும் அர்ப்பணிப்போடு சேவையாற்றும் ஊழியர்களிடையே மேலதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையைப் பொறுத்த வரை மேலதிக ஆளணி மற்றும் பௌதீக வளங்களை ஏற்படுத்தும் அதிகாரமோ மற்றும் வாய்ப்புக்களோ அதன் நிர்வாகத்திற்குக் கிடையாது.எம்மால் எமது கோரிக்கைகளை மேலதிகாரிகளுக்கு அனுப்ப மாத்திரமே முடியும்.ஆயினும் நோயாளர்களின் நலன்கருதி எம்மிடமுள்ள வளங்களை உச்ச அளவில் பயன்படுத்திச் சிறப்பான சேவையை வழங்க முடியும்.எனவே நோயாளர்களும் பொதுமக்களும் வைத்தியசாலையின் இக்கட்டான நிலையை உணர்ந்து தங்களின் மேலான ஒத்துழைப்பை வழங்குமாறு வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment

COIVD-19 தொற்று , கதிரைகள் வழங்கிவைப்பு

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால்  COIVD-19 தொற்று கதிரைகள் வழங்கிவைப்பு! தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு 25 ...